மக்கள் வீட்டு வாசல்களில் மரண எச்சரிக்கை பதித்திருந்த தாலிபான்கள்: பகீர் கிளப்பும் சம்பவம்
பிரித்தானிய ராணுவத்திற்காக ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய உள்ளூர் மக்களின் வீட்டு வாசலில் தாலிபான்கள் மரண எச்சரிக்கை பதித்திருந்தது பீதியை கிளப்பியுள்ளது.
சொந்த நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் கண்டிப்பாக நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும், விசாரணையில் குற்றம் நிரூபணமானால் மரண தண்டனை தான் எனவும் தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, பலர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மரண எச்சரிக்கை கடிதங்கள் அனைத்தும் இரவோடு இரவாக வீட்டு வாசல்களில் பதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் ஆதிக்கம் இருந்த துவக்க நாட்களில் தாலிபான்கள் இதுபோன்ற மரண எச்சரிக்கை கடிதங்களை வீட்டு வாசல்களில் பதித்து வந்துள்ளனர். அதன் பின்னர், தாலிபான்களை நேட்டோ படைகள் வேட்டையாடியதுடன், பலர் மலைப்பகுதிகளுக்கு மாயமாகினர்.
தற்போது மீண்டும் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவியவர்களை மட்டுமே தாலிபான்கள் வேட்டையாடி வருகின்றனர்.
34 வயதான 6 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு தாலிபான்களின் குறித்த மரண எச்சரிக்கை கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது கட்டுமான நிறுவனம் பிரித்தானிய துருப்புகளுக்கு ஆப்கானிஸ்தானில் உதவியுள்ளது.
தாலிபான்களின் நீதி விசாரணைக்கு சென்றால் கண்டிப்பாக தண்டிக்கப் படுவோம் என அவர் பீதியுடன் தெரிவித்துள்ளார். ஆனால், தாலிபான்களின் விசாரணையை எதிகொள்ளாமல் தவிர்த்தால் அதும் எனது மரணத்திற்கு காரணமாக அமையும் என்றார்.
இதனிடையே, பிரித்தானிய நிர்வாகம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் தம்மையும் மீட்டுச் செல்ல அவர் பதிவு செய்ததாகவும், ஆனால் பிரித்தானியா நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.