ஆப்கானிஸ்தான் நாட்டின் மிக பிரபலமான பாப் பாடகி தப்பியோட்டம்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என முதலில் அவர்கள் கூறியிருந்தார்கள்.
ஆனால், பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லலாமா, பெண்கள் வேலைக்குச் செல்லலாமா என்பது போன்ற விடயங்கள் குறித்து மதத் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று இப்போது கூறுகிறார்கள்.
ஆக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ஒரு காலத்தில் பிரபலங்கள் என அழைக்கப்பட்டவர்களுக்கு இப்போது சிக்கல் உருவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மிக பிரபலமான பாப் பாடகி என்று அறியப்பட்டவரும், பிரபல இசை நிகழ்ச்சியின் நடுவருமான Aryana Sayeed, கூட்டத்தோடு கூட்டமாக, தன் கணவருடன் அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றில் தப்பிவிட்டார்.
முதலில் கத்தார் சென்ற அவர், தற்போது துருக்கியை அடைந்துள்ளதாகவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், மற்றொரு பிரபலமான Salima Mazari என்பவர் தாலிபான்களிடம் சிக்கிக்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் முதல் பெண் கவர்னர்களில் ஒருவர் என அறியப்பட்டவரான Salima தாலிபான்களால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்கள் பதவிகள் வகிப்பதை ஏற்றுக்கொள்ளாத தாலிபான்கள், அவரை கொலை செய்துவிடலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.