தாலிபான்களின் கைகளில் சிக்கியுள்ள கோடிக்கணக்கானோரின் பயோமெட்ரிக் தகவல்கள்: பீதியில் உலகம்
ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையில் கைப்பற்றியுள்ள தாலிபான்களின் வசம் தற்போது கோடிக்கணக்கானோரின் பயோமெட்ரிக் தகவல்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த நாட்களில் சேகரித்த பயோமெட்ரிக் தகவல்கள் தற்போது தாலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளின் தகவல்களை திரட்டும் நோக்கில் குறித்த பயோமெட்ரிக் தகவல்களை அமெரிக்க ராணுவம் சேகரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தகவல்களும் இதில் சேர்க்கப்பட்டது.
தாலிபான்களிடம் சிக்கியுள்ள பயோமெட்ரிக் தகவல்களில் 2.5 கோடி பேர்களின் மொத்த தகவல்கள் உள்ளதாகவே தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தகவல்களை தாலிபான்கள் ஆராய்ந்தால், அதில் அமெரிக்க ராணுவத்திற்காக உள்ளூரில் செயல்பட்ட ஆப்கான் மக்களின் தகவல்களும் வெளிச்சத்திற்கு வரும்.
அவர்களிடம் தாலிபான்கள் பழிவாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கலாம். இதுவே தற்போது அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கைரேகைகள் தொடங்கி முக்கியமான பல தகவல்கள் அதில் பதிவாகியுள்ளது. மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களும் அதில் உட்படுத்தப்பட்டுள்ளது.
காபூல் நகருக்குள் தாலிபான் நுழைந்த சில மணி நேரங்களில் அவர்கள் இதுபோன்ற பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்ட கருவிகளையே கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
ஆனால், பயோமெட்ரிக் கருவிகளை கைப்பற்றியுள்ள தாலிபான்களால் அதை உரிய முறையில் பயன்படுத்த முடியாது எனவும், அதற்கான நிபுணர்கள் குழு ஒன்றும் அவர்களிடம் இல்லை என்றே அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால், தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளால் பேராபத்து வரலாம் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.