கொலைப் பட்டியல் தயார் செய்த தாலிபான்... பெண்களுக்கு குறி: வெளிவரும் பகீர் பின்னணி
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், கொலைப்பட்டியல் ஒன்றை தாலிபான் வகுத்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இனி பெண்கள் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடும் எனவும், வீட்டு வாசலின் முன்பு கொலை செய்யப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
நீண்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள தாலிபான் தீவிரவாதிகள் தற்போது காபூல் நகரில் வீடு வீடாக சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், ராணுவத்தினர் ஆகியோர்களை வேட்டையாட தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தாலிபான் ஆதரவு வெளிநாட்டு தீவிரவாதிகள் பெருந்திரளாக ஆப்கானிஸ்தானுக்கு வரவிருப்பதாகவும், அதனால் பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் துருப்புகள் உடனடியாக வெளியேறிவிடுங்கள் எனவும் தாலிபான் தரப்பு கூறியுள்ளது.
மட்டுமின்றி, வெளிநாட்டு தாலிபான் ஆதரவு படைகளால் தான் மிக விரைவாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது எனவும் தாலிபான் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் எனவும் மூர்க்கத்தனமானவர்கள் எனவும், ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அவர்கள் வரவில்லை எனவும் தாலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
முதல் ஆட்சி காலத்தில் முன்னெடுத்த கொடூர சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் எனவும் சூளுரைத்துள்ளனர். இதனிடையே, கந்தஹாரில் ஒரு விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
காபூல் நகரில் பல அதிகாரிகள் தங்கள் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளதாகவே கருதுவதாக கூறப்படுகிறது.
மேலும், அரசாங்கத்தில், ஊடகத்துறையில் பணியாற்றி வந்த பெண்களின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.