காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் இவர் தான்! புகைப்படத்துடன் கசிந்த தகவல்
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த பிறகு அங்கு முதல் வெளிநாட்டு தலைவராக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காபூலுக்கு இன்று வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காபூலுக்கு வந்து தாலிபான் தலைவர்களை குரேஷி சந்தித்து பேசுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் Tolo News agency வெளியிட்ட செய்தியின்படி குரேஷி ஆகஸ்ட் 22, ஞாயிற்றுக்கிழமை காபூலில் இருக்க திட்டமிட்டுள்ளார். காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அவர்கள் வரவேற்கும் முதல் வெளிநாட்டு தலைவராக குரேஷி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பாகிஸ்தான் தனது பங்கை வகிக்க விரும்புவதையே குரேஷியின் வருகை காட்டுவதாக உள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் குரேஷி, சனிக்கிழமை ரஷ்யா, ஜேர்மனி, துருக்கி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் உள்ள சக தலைவர்களிடம் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடனான உரையாடலின் போது, அமைதியான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தான் என்பது பாகிஸ்தானுக்கும் பிராந்தியத்திற்கும் மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அமைதி செயல்முறைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.