ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொடர்பில் முக்கிய சபதம்! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு
பெண்கள் உரிமைகளை மதிக்க சபதம் எடுப்போம் என கூறியுள்ள தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது.
ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன.
தலிபான்களோ முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றனர். தலிபான்கள் வசம் ஆப்கானின் பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்கள்தான்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பில் தாலிபான்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பேசியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ஆட்சியாளர்களையோ, பொதுமக்களையோ கொலை செய்வதோ, சொத்துக்களை கொள்ளையடிப்பதோ எங்களின் நோக்கமில்லை.
பெண்கள் உரிமைகளை மதிக்க சபதம் எடுப்போம். அவர்கள் கல்வி கற்கத் தடையில்லை. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்படும்.
எந்த வகை பர்தா வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.