தாலிபான்களுடன் முதல் நாடாக கைகோர்க்கிறதா சீனா? வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பங்கை சீனா ஆற்றியுள்ளதாக தாலிபான்கள் கூறியுள்ள நிலையில் அவர்களுடன் சீனா கைகோர்க்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுவதுமாக தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு தாலிபான் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் மீண்டும் பின்பற்றப்படுமா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
தாலிபான்களை அங்கீகரிக்க பிற நாடுகள் தயக்கம் காட்டிவருகிறது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பங்கை சீனா ஆற்றியுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் சீன செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், சீனா ஒரு பெரிய நாடு. அதற்கு மிகப் பெரிய பொருளாதாரமும் திறனும் உள்ளது.
ஆப்கானிஸ்தானை மீண்டும் சீரமைத்து கட்டியெழுப்புவதில் சீனா மிகப் பெரிய பங்காற்றலாம் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக, சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யியை தாலிபான் குழு கடந்த மாதம் துறைமக நகரமான தியான்ஜினில் சந்தித்து பேசியது.
அதன் பின் பேசிய வாங் யி, ஆப்கானிஸ்தான் மிதவாத இஸ்லாமிய கொள்கையை பின்பற்றும் என நம்புவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.