அசாத்திய நடிப்பு! ஆனாலும் விருதுகளை குவிக்காத சரத்பாபு- உடல் உறுப்புகள் செயலழிந்து மரணம்
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் சரத்பாபு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார்.
உடல் நலக்குறையுடன் போராடிய நடிகர் சரத் பாபு
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகர் சரத்பாபு கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றின் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்தார்.
அத்துடன் அவர் செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டது அவரது உடல்நல கோளாறு-க்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த செப்சிஸ் நோய் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே உடலை சேதமடைய வைத்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு எதிர்வினையாற்றும் அபாயகரமான மருத்துவ நிலையாகும்.
சென்னைக்கு கொண்டு வரப்படும் சரத்பாபு-வின் உடல்
நடிகர் சரத்பாபு-வின் வீடு சென்னை தியாகராயா நகரில் இருக்கும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
இன்று நடிகர் சரத்பாபு உயிரிழந்து விட்டதால் அவரது உடலை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குகளை நடத்த அவரது உறவினர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் நீண்ட நாட்களாக வீடு பூட்டி இருப்பதால் அதை சுத்தம் செய்து இறுதி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது என்பது கடினம், எனவே பொது இடம் ஒன்றில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்கு உடலை வைக்க அவரது குடும்பம் பரிசீலித்து வருவதாகவும் நடிகை சுஹாசினி தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடிகர் சரத்பாபு-வின் இழப்பிற்கு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகில் நீங்கா இடம் பிடித்த கலைஞர்
1973ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ராமராஜ்ஜியம் என்ற திரைப்படம் மூலம் சரத்பாபு திரையுலகிற்கு முதன்முறையாக அறிமுகமானார்.
இருப்பினும் அதன் பிறகு சொல்லும்படியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவரது தந்தையின் ஹோட்டலை சிறிது காலம் கவனித்து வந்தார்.
பின் 1976ல் ராஜா என்ற படத்தில் நடித்தார், அதிலிருந்து அவரது திரையுலக பயணம் ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியது.
1977ல் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக சரத்பாபு அறிமுகமானார்.
இந்த திரைப்படம் அவருடைய நடிப்பு திறமையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டியது, அத்துடன் இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
தமிழில் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் திரையுலக பயணத்தில் முக்கிய படமாக விளங்கும் முள்ளும் மலரும் திரைப்படத்தில் நடிகர் சரத்பாபுவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும் திரைப்படம் அப்போதைய பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி(முத்து, அண்ணாமலை) மற்றும் கமல்(நிழல் நிஜமாகிறது) ஆகியோரின் திரைப்படங்களில் சிறந்த இணை நடிகராகவும் வலம் வந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் இயக்குனர் ரமணன் இயக்கத்தில் வெளிவந்த வசந்த முல்லை, மற்றும் தெலுங்கில் மல்லி பெல்லி ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார்.
சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த இவர் கடந்த 2003 ஆண்டு ராஜ் டிவியில் ஒளிபரப்பான ரெக்க கட்டிய மனசு, சன் டிவியில் 2013ல் வெளியான ராஜகுமாரி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
நடிகர் சரத்பாபுவின் 50 ஆண்டுகால திரைப் பயணத்தில் தமிழ்நாடு அரசின் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான திரைப்பட விருதை 2017ம் ஆண்டு நடிகர் சரத்பாபு பெற்றுள்ளார்.
அத்துடன் தெலுங்கு சினிமாவில் 1987,1988,1989 ஆகிய ஆண்டுகளில் சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் சரத்பாபு பெற்றுள்ளார்.