சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம்
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வெள்ளப்பெருக்கு
சத்தீஸ்கர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் வாலே தேசிய பூங்கா வெள்ளத்தால் சூழ்ந்தது. அங்கு காரில் பயணித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கங்கர் நலாவை கடக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்களின் கார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
இந்த நிலையில் பலியான குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. அவர்கள் தமிழ்நாட்டின் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (43), அவரது மனைவி பவித்ரா (40) மற்றும் பிள்ளைகள் சவுஜன்யா (7), சௌமியா (4) என அடையாளம் காணப்பட்டது.
மேலும், ராய்ப்பூரில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்த ராஜேஷ், குடும்பத்துடன் பஸ்தாருக்கு சுற்றுலா சென்றிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம், அவர்கள் நான்கு பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |