UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழ்நாட்டு விவசாயி மகள்
UPSC தேர்வில் திருப்பூரைச் சேர்ந்த விவசாயி மகள் அகில இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
யார் அவர்?
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி (UPSC ) சிவில் சர்வீஸ் தேர்வினை நடத்துகிறது.
இந்த தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உள்ளன. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் வெளியாகின.
இந்த தேர்வில் 1000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவர் முதலிடத்தையும், ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாம் இடத்தையும், டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழக மாவட்டம் திருப்பூரைச் சேர்ந்த விவசாயி மகள் அகில இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகர்-ராஜேஸ்வரி. இவர்களது மகள் மோகன தீபிகா (வயது 23) யுபிஎஸ்சி தேர்வில் 617-வது இடம் பிடித்துள்ளார்.
இது குறித்து தீபிகா கூறுகையில், "ஏழை விவசாயி மகளான நான் எனது ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். கல்லூரி படிப்பை கோவையில் படித்தேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்கு எனது ஆசிரியர்களும் துணையாக இருந்தனர். மேலும், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு மிகவும் பயனளித்தது. அதோடு சென்னையில் நாளை நடைபெற உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |