அமெரிக்க தலைநகரின் மேயர் தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு பெண் - யார் இந்த ரினி சம்பத்?
அமெரிக்க தலைநகருக்கான மேயர் தேர்தல் களத்தில் தமிழ்நாட்டில் பிறந்த பெண் ஒருவர் இறங்கியுள்ளார்.
ரினி சம்பத்
அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசியின் மேயருக்கான ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் தனது வேட்புமனுவை அறிவித்துள்ளார் ரினி சம்பத்(Rini Sampath).

31 வயதான ரினி சம்பத், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர் ஆவார். தமிழ்நாட்டின் தேனி மாவட்டதில் பிறந்த அவர் 7 வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளார்.
பிரச்சார பொருட்களின்படி தமிழ் அவரது முதல் மொழி ஆகும். இந்த போட்டியில் நுழைந்ததிலிருந்து ரினி சம்பத் 15,000 டொலருக்கும் அதிகமாக நிதி திரட்டியதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் இவர், தான் ஒரு அரசியவாதி இல்லை, எந்த ஒரு சிறப்பு குழுக்களும் எனக்கு ஆதரவாக இல்லை. அரசாங்கத் திட்டங்கள் மற்றும் குடிமக்கள் சேவைகளை மேம்படுத்துவதில் எனது வாழ்க்கையைச் செலவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.
மேயராக, நமது நகர குடியிருப்பாளர்களுக்கான அடிப்படை உறுதிமொழிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதே எனது முன்னுரிமையாக இருக்கும் என தெரிவித்துள்ள அவர், சாலையில் உள்ள குழிகளை நிரப்புதல், கழிவுநீர் கசிவை நிறுத்துதல், விலைவாசியை குறைத்தல் போன்ற வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் ரினி சம்பத் வெற்றி பெற்றால், வாஷிங்டன் டிசியின் மேயருக்கான தேர்தலில், டிரம்ப்பின் குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவார்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்(USC) சர்வதேச உறவுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான படிப்பை முடித்து இவர் சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |