ஜோதிடப்படி தேர்ந்தெடுத்த லொட்டரி எண் - அபுதாபியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு ரூ.6.3 லட்சம் பரிசு
Tamil Nadu Engineer Wins UAE Lottery Using Astrology: அபுதாபி லொட்டரியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு ரூ.6.3 லட்சம் பரிசு விழுந்துள்ளது.
அபுதாபியில் நடைபெறும் பிரபல Big Ticket லொட்டரியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயதான பொறியாளர் ஒருவர், தென்னிந்திய ஜோதிடத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த எண்ணின் மூலம் Dh25,000 (சுமார் ரூ.6.3 லட்சம்) பரிசு வென்றுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜோதிடப்படி தேர்வு செய்யப்பட்ட எண்
தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்தன் (Aravindan K), வழக்கமாக தனது நண்பர்களுடன் இணைந்து Big Ticket லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.
ஆனால் இந்த முறை அவர் தனது சகோதரருடன் சேர்ந்து சீட்டு வாங்கியதுடன், தென்னிந்திய ஜோதிட முறையின் அடிப்படையில் ஒரு எண்ணை தேர்வு செய்தார். அந்த எண்ணே அவருக்கு அதிர்ஷ்டத்தை தேடித்தந்தது.
எதிர்பாராத மகிழ்ச்சி
வெற்றி பெற்றதாக தொலைபேசி அழைப்பு வந்தபோது, தன்னால் நம்ப முடியவில்லை என்று அரவிந்தன் தெரிவித்துள்ளார். குடும்பத்திற்கு இந்த நிதி உதவி மிகவும் அவசியமான நேரத்தில் கிடைத்திருப்பதால், இந்த வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தாயின் மருத்துவ செலவுக்கு உதவும் பரிசுத் தொகை
கடந்த சில மாதங்களாக தனது தாயின் மருத்துவச் செலவுகளை சமாளிப்பதற்கான வழிகளை தேடி வந்ததாக அரவிந்தன் தெரிவித்துள்ளார். இந்தப் பரிசுத் தொகையை முதன்மையாக தாயின் சிகிச்சை செலவுகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சகோதரருடன் பகிர முடிவு இந்த லொட்டரி சீட்டை தனது சகோதரருடன் இணைந்து வாங்கியதால், கிடைத்த பரிசுத் தொகையை சகோதரருடன் சமமாக பகிர்ந்து கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளார்.
அபுதாபி கொடுத்த அதிர்ஷ்டம்
கடந்த ஆண்டு 6 மாத பணியிட நியமனத்தின் காரணமாக அபுதாபி சென்றிருந்த போது, தனது முன்னாள் சக ஊழியர்கள் மூலம் Big Ticket லொட்டரி குறித்து அரவிந்தன் அறிந்துகொண்டார். பணியாற்றிய காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து இதில் பங்கேற்று வந்ததாக கூறப்படுகிறது.
நான்கு இந்தியர்களுக்கு பரிசு
வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் மாதத்தின் மூன்றாவது வார மின்னணு குலுக்கலில் Dh25,000 பரிசை வென்ற நான்கு இந்தியர்களில் ஒருவராக அரவிந்தன் இருந்தார். மற்ற வெற்றியாளர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே ஆவர்.
Big Ticket
Big Ticket நிறுவனத்தின் தற்போதைய சிறப்பு குலுக்கலில் Dh25 மில்லியன் (சுமார் ரூ.57 கோடி) மாபெரும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக் குலுக்கல் டிசம்பர் 3-ஆம் திகதி நடைபெற உள்ளது.