தமிழ்நாட்டில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் - சட்டமன்றத்தில் அறிவித்த அமைச்சர்
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரேஷன் பொருட்கள்
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று தமிழக சட்டபேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில், "கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் ரேசன் பொருட்கள் பெறும் வகையில் திட்டம் இருக்கும் நிலையில், அதைப் போலவே தமிழகத்திலும் செயல்படுத்த அரசு முன்வருமா" என அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் சக்கரபாணி
இதற்கு பதிலளித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, "ஆந்திராவில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயலில் உள்ளது.
வரும் 20ஆம் தேதி உணவுத்துறை அதிகாரிகள், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், முதல்வருடன் ஆலோசித்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில் புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |