குடிநீரில் கலக்கப்பட்ட மலம்! தமிழகத்தை உலுக்கிய சம்பவம்... சமூக விரோதியை நெருங்கிய பொலிஸ்
தமிழகத்தில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை பொலிசார் நெருங்கியுள்ளனர்.
குடிநீரில் கலக்கப்பட்ட மலம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த மாதம் மூன்று, இரண்டரை, ஆறு ஆகிய வயதுடைய குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
குழந்தைகளின் ஒவ்வாமைக்கு குடிநீரில் கிருமி கலந்திருக்கிறதா என ஆய்வு செய்ய மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து குடிநீர் தண்ணீர் தொட்டியில் பார்த்த போது உள்ளே மனிதக்கழிவு மிதந்தது தெரியவந்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த மறுநாள் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கள் கிராமத்தில் தீண்டாமை உள்ளதாக மக்கள் கூறினார்கள்.
சமூகவிரோதியை நெருங்கிய பொலிசார்
குடிநீரில் மனித கழிவு கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். சம்பந்தப்பட்ட நாளில் அந்தப் பகுதியில் சுற்றிய இளைஞர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென தனியாக ஒரு தொழில்நுட்ப புலனாய்வுக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்தக் குழுக்களின் புலனாய்வு தற்போது குறிப்பிட்ட ஒரு நபரிடம் வந்து நிற்கிறது. அந்த நபர் பற்றிய விபரங்களை வெளியிட பொலிசார் தயாராகும் நிலையில் பல்வேறு நிலைகளில் இருந்தும் தடைகள் வருவதாகக் கூறப்படுகிறது.
அதனால் யார் அந்த நபர் என்பதை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். பொதுமக்களின் குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்த சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.