புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனி டெக்ஸி கிடையாது: உள்துறைச் செயலரின் அடுத்த அதிரடி
உடல் நலம் பாதிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல டெக்ஸி சேவை இனி கிடையாது என்று கூறியுள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலர்.
இனி டெக்ஸி கிடையாது
புகலிடக்கோரிக்கையாளர்கள் ஏன்தான் பிரித்தானியாவுக்கு வந்தோமோ என தலையில் அடித்துக்கொள்ளும் வகையில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.

அவ்வகையில், வரும் பிப்ரவரி மாதம் முதல், மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்டுக்காக செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்கள் டெக்ஸியில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக, பேருந்தில் மட்டுமே செல்ல உடல் நலம் பாதிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

உடற்குறைபாடுகள் கொண்டவர்கள், சீரியஸாக இருப்பவர்கள், நீண்ட கால நோயாளிகள் மற்றும் பிரசவம் போன்ற விடயங்களுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்கள் மருத்துவர்களைக் காணச் செல்வதற்காக, பிரித்தானியா ஆண்டொன்றிற்கு 15.8 மில்லியன் பவுண்டுகள் செலவிடுவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
சில புகலிடக்கோரிக்கையாளர்கள் மருத்துவரைக் காண்பதற்காக மிக அதிக தூரம் டெக்ஸியில் பயணிக்கிறார்களாம். பிபிசியின் விசாரணை ஒன்றில் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் மருத்துவரை சந்திப்பதற்காக டெக்ஸியில் 250 கிலோமீற்றர் பயணித்தது தெரியவந்தது.
அதற்கான டெக்ஸி கட்டணம் 600 பவுண்டுகள் என தெரியவந்ததைத் தொடர்ந்து அரசு இந்த விடயம் தொடர்பில் மீளாய்வு மேற்கொண்டது.
அதன் விளைவாகத்தான் இனி மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்டுக்காக செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்கள் டெக்ஸியில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |