12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் TCS - என்ன காரணம்?
12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக TCS நிறுவனம் அறிவித்துள்ளது.
12,000 ஊழியர்கள் பணி நீக்கம்
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவதும் டிசிஎஸ்(TCS) என அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனமாகும்.
ஜூன் 2025 நிலவரப்படி, உலகளவில் 6,13,000 பேர் டிசிஎஸ்சில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், தனது ஊழியர்களின் 2 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, 12,200 ஊழியர்கள் ஆவார்கள்.
இந்த வேலை நீக்கம், 2026ஆம் நிதியாண்டில் (ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இது குறித்து பேசிய TCS நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கே. கிரிதிவாசன், "எங்கள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
வேலை செய்வதற்கான முறைகள் மாறி வருகின்றன. நாம் எதிர்காலத்திற்குத் தயாராகவும் துரிதமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
எங்கள் பணியாளர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் புதிய பொறுப்புகளை வழங்குவதில் நிறைய முதலீடு செய்துள்ளோம். இருப்பினும், சில பகுதிகளில் மாற்று பணிநியமனங்கள் பயனுள்ளதாக இருக்கவில்லை.
இதன் காரணமாக, உலகளாவிய அளவில் டிசிஎஸ் பணியாளர்களில் சுமார் 2% பேர் பாதிக்கப்படுவார்கள். முக்கியமாக நடுத்தர மற்றும் மூத்த நிலைகளில் இருப்பவர்கள் இதில் பதிப்படைவார்கள். இது ஒரு எளிதான முடிவல்ல" என தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு, நோட்டீஸ் கால சம்பளம், காப்பீட்டு வசதிகளை நீட்டித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே AI தாக்கம் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாகவும், மூத்த ஊழியர்கள் புதிய தொழில்நுட்ப சூழலுக்கேற்ப மாற தயங்குவதால் இதில் பாதிக்கப்படுகிறார்கள் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |