முடி வெட்டிவிட்டு வருமாறு ஆசிரியர் கண்டிப்பு? மாணவர் எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டம், புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் தற்கொலை தொடர்பாக உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் கண்டிப்பு
புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கண்ணையா மற்றும் மாரிக்கண்ணு. இதில், கன்னையா என்பவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு, மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற இரண்டு மகன்களும், மகர ஜோதி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இதில், மாதேஸ்வரன் என்ற மகன் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், அதிக முடி மற்றும் தாடியை வைத்து மாதேஸ்வரன் தொடர்ந்து பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
மாணவரின் விபரீத முடிவு
அதே போல, நேற்று காலை முடி சரியாக வெட்டிவிட்டு வராத மாணவர்களை பள்ளிக்கு வெளியில் நிற்க வைத்து, முடி வெட்டிவிட்டு வருமாறு ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஆனால், இரண்டு மாணவர்கள் மட்டுமே திரும்ப வந்துள்ளனர். மாதேஸ்வரன் பள்ளிக்கு திரும்பி வரவில்லை.
இதனையடுத்து, பள்ளிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலிருந்த பொலிசார் விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு, ஆசிரியர்களின் அலட்சியம் தான் காரணம் என மருத்துவமனையின் முன்பு, மாணவரின் உறவினர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால், அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |