'இராணுவ ஆட்சி வேண்டாம்' மியான்மரில் இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்!
மியான்மர் நாட்டில் இரண்டாவது நாளாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்கவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்தேர்தல் முறைகேடு விவகாரத்தில் அரசு தலைவர் ஆங் சான் சூகி கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட பிறகு, மியானமரின் ஆட்சியை மியானமர் இராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.
ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரையும் இராணுவம் சிறையில் வைத்துள்ளது.
மேலும், அடுத்த ஓராண்டுக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் பின்னர் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு வெற்றிபெறுபவரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்று இராணுவம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகினற்னர்.
இந்நிலையில், இராணுவ அடசிக்கு எதிரப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகியை விடுவிக்கவும் கோரி நாட்டின் முக்கிய நகரங்களான யாங்கோன், மேண்டலே மற்றும் மாவ்லாமைன் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகினறனர்.
சிகப்பு பலூன்களை ஏந்தியும், சிகப்பு உடைகளை அனைத்தும், சர்வாதிகாரத்திற்கு எதிரான மீறலின் அடையாளமாக மாறியுள்ள மூன்று விரல் வணக்கத்தை காட்டியும், ஆங் சான் சூகியின் புகைப்படங்கள் ஏந்தியும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

