பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் பலத்த அடி வாங்கும் டெஸ்லா
ஜனவரி மாதத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உட்பட ஐந்து ஐரோப்பிய நாடுகளில் எலோன் மஸ்கின் டெஸ்லா விற்பனை கடும் சரிவை பதிவு செய்துள்ளது.
டெஸ்லா விற்பனை மந்தம்
புதிய மொடல்களைக் கொண்ட போட்டியாளர்கள் மின்சார வாகன தயாரிப்பில் முந்துவதாலையே டெஸ்லா விற்பனை மந்தமாகியுள்ளது. அத்துடன் எலோன் மஸ்க் மீதான பொது மக்களின் அதிருப்தியும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வர பல காரணங்களில், எலோன் மஸ்கின் ஆதரவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. பல மில்லியன் டொலர் செலவிட்டு தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்த மஸ்க், தமது டுவிட்டர் நிறுவனம் ஊடாகவும் ட்ரம்பின் வெற்றிக்காக உழைத்தார்.
அத்துடன், ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவில் உள்ள தீவிர வலதுசாரி கட்சிகளை வெளிப்படையாக ஆதரித்து விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஐரோப்பாவின் மிகப்பெரிய மின்சார வாகன சந்தையில் மாதாந்திர மின்சார வாகனப் பதிவுகள் சாதனை அளவை எட்டிய போதிலும்,
ஜனவரி மாதத்தில் டெஸ்லாவின் பிரித்தானிய விற்பனை கிட்டத்தட்ட 12 சதவிகிதம் சரிந்தது. பிரான்சில் 63 சதவிகிதமும், ஸ்வீடனில் 44 சதவிகிதமும் நோர்வேயில் 38 சதவிகிதமும் நெதர்லாந்தில் 42 சதவிகிதமும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய கார் சந்தையான கலிபோர்னியாவில், 2024ல் மட்டும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான வாகனப் பதிவு நடந்த நிலையில், டெஸ்லா விற்பனை 12 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
63 சதவிகிதம் சரிவு
அமெரிக்காவில் மின்சார வாகன விற்பனையில் தற்போதும் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா நிறுவனம், 2024ல் முதல்முறையாக விற்பனை சரிவை பதிவு செய்தது. இருப்பினும் மலிவான விலை டெஸ்லா கார்களை வெளியிட இருப்பதாக எலோன் மஸ்க் அறிவித்தும் நெருக்கடியே மிஞ்சியுள்ளது.
மின்சார வாகன விற்பனையில் பிரித்தானியாவில் இரண்டாம் இடத்தில் இருந்த டெஸ்லா தற்போது 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகமெங்கிலும் உள்ள நுகர்வோர் மஸ்க் தொடர்பில் கலவையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மஸ்கின் அரசியல் பார்வையே பலரும் டெச்லா வாங்குவதில் இருந்து விலகியதன் காரணமாக கூறுகின்றனர். டெஸ்லா தொடர்பில் ஸ்வீடன் மக்களின் நன்மதிப்பு 63 சதவிகிதம் சரிவடைந்துள்ளது என்றே சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் இருந்து தெரிய வருகிறது.
டெஸ்லா கடும் நெருக்கடியை எதிகொண்டுவரும் நிலையில், ஒருபக்கம் சத்தமே இல்லாமல் மின்சார வாகனங்களில் சீனா சாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |