தாலியை கழட்டினால்தான் தேர்வு எழுத முடியும்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
தாலியை கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதி எனக் கூறியதால் தெலங்கானாவில் வெடித்த சர்ச்சை
பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படுவதாக உயரதிகாரி தெரிவித்துள்ளார்
தெலங்கானாவில் தேர்வு எழுதச் சென்ற பெண்கள் தாலியை கழட்ட வேண்டும் என கூறப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது.
இந்த நிலையில் தெலங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் குரூப் தேர்வு எழுத நூற்றுக்கணக்கான தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள், தேர்வு எழுத வந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த நகைகளை கழட்டி வைத்த பிறகே தேர்வு எழுத வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தேர்வர்களும் அவ்வாறே செய்துள்ளனர். ஆனால் தாலியையும் கழட்டி வைத்தால் தான் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெண்கள், வேறு வழியின்றி தங்கள் தாலியை கழட்டி வைத்து விட்டு தேர்வு எழுதியுள்ளனர்.
அதேவேளையில் இஸ்லாம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தபோது, அவர்களுக்கு எந்தவித கட்டுப்படும் விதிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல் அதிகாரி உதய்குமார் ரெட்டி கூறுகையில், 'தேர்வு எழுத வந்த பெண்களிடம் தாலியை கழட்டுமாறு பொலிஸார் கூறியது உண்மைதான். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. சரியான புரிதல் இல்லாமல் பொலிஸார் இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.