மூன்றரையாண்டுகளாக கோமாவிலிருந்த இளவரசி: ஒரு துயரச் செய்தி
தாய்லாந்து நாட்டின் அரியணை ஏறும் வரிசையில் அடுத்ததாக இருப்பவர் என கருதப்படும் இளவரசி மூன்றரையாண்டுகளாக கோமாவிலிருந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றரையாண்டுகளாக கோமாவிலிருந்த இளவரசி
தாய்லாந்து மன்னரான வஜிரலோங்கார்னுடைய மூத்த மகளான இளவரசி பஜ்ரகிட்டியபா மஹிடோல் (Bajrakitiyabha Mahidol, 47), 2022ஆம் ஆண்டு வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலைகுலைந்து சரிந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் கோமா நிலைக்குச் சென்றார், மூன்றரையாண்டுகளாக அவர் கோமா நிலையிலேயேதான் இருந்துவந்தார்.
மே மாதத்தில் அவரது உள்ளுறுப்புகள் பலவற்றில் தொற்று உருவாகியுள்ளதாகவும், அவரது இதயத் துடிப்பை சீர் செய்ய இயலவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
அவர் சுவாசிப்பதற்கும், அவரது சிறுநீரக செயல்பாட்டுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்னரின் மூத்த மகளான பஜ்ரகிட்டியபா, இளவரசி பா என மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இளவரசி பா, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இரண்டில் சட்டத்தில் முதுகலைப் பட்டங்கள் உட்பட, பல பட்டங்கள் பெற்றவர் ஆவார்.
அத்துடன், 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, ஆஸ்திரியா நாட்டுக்கான தாய்லாந்து தூதராகவும் பணியாற்றியவர் இளவரசி பா.
மேலும், அவர் மன்னரின் தனிப்பட்ட பாதுகாவலர்களில் மூத்த அதிகாரியாகவும், அட்டர்னி அலுவலகத்திலும், போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகத்தின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியவர் ஆவார்.
மன்னர் வஜிரலோங்கார்னுக்கு அடுத்தபடியாக இளவரசி பாதான் நாட்டை ஆட்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், அவரது மரணம் குறித்த செய்தி மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |