வெளிநாட்டில் பிரித்தானிய துருப்புகளின் கொடூரம்... பற்றியெரியும் 8,000 ஏக்கர்: பரிதாபமாக பலியான 5 யானைகள்
கென்யாவில் பிரித்தானிய ராணுவத்தினர் சிலரால் மூட்டப்பட்ட நெருப்பில் சிக்கி, 5 யானைகள் பரிதாபமாக இறந்த சம்பவத்தில் பிரித்தானிய ராணுவம் தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் நெருப்புக்கு காரணம் பிரித்தானிய ராணுவத்தினர் சிலரின் பொறுப்பற்ற செயல் என்பதை விசாரணை அதிகாரிகளும் தற்போது உறுதி செய்துள்ளனர்.
பெரும் தீ அப்பகுதி முழுவதும் தொடர்வதை அடுத்து பிரித்தானிய துருப்புகள் தங்கியிருக்கும் Lolldaiga பயிற்சி பகுதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், நூற்றுக்கணக்கான பிரித்தானிய ராணுவ வீரர்கள் தற்போது மளமளவென பரவும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, போராடி வருகின்றனர். நேற்றிரவு பிரித்தானிய மற்றும் கென்ய இராணுவ ஹெலிகொப்டர்கள் நூற்றுக்கணக்கான டன் தண்ணீரை தீயில் கொட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மட்டுமின்றி சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.
பிரித்தானிய துருப்புகள் போர் பயிற்சியில் ஈடுபட்டுவருவதால், அப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கில் மின் வேலி அமைத்திருந்தனர். ஆனால் 4 யானைகள் அந்த மின் வேலி அமைந்திருந்த பகுதிக்குள் சிக்கிக் கொண்டதால், இந்த தீ விபத்தின் போது காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இதனால் 4 யானைகள் தீயில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஒரு குட்டி யானையும் தீயில் சிக்கி மரணமடைந்துள்ளது. புதன்கிழமை பிரித்தானிய துருப்புகளில் சிலர் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராதவகையில் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், காய்ந்து போன சருகுகளில் பற்றிய நெருப்பு, மளமளவென அப்பகுதி முழுவதும் படர்ந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பகுதி முழுவதும் நெருப்பு படர்ந்துள்ளது. கென்யாவில் தற்போது 1,000 க்கும் மேற்பட்ட பிரித்தானிய துருப்புக்கள் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நடந்த விவகாரம் தொடர்பில் இதுவரை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கருத்தேதும் வெளியிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஆனால், தீ விபத்து சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மட்டுமே தெரிவித்துள்ளது.
8,000 ஏக்கர் அளவுக்கு பரவியுள்ள இந்த காட்டுத் தீயில் பிரித்தானிய ராணுவத்தினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.