செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும்! பரபரப்பு தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு
செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த மனுவின் தீர்ப்பை இன்று வாசித்தார்.
தீர்ப்பில் கூறியது என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தன்னைக் குற்றமற்றவர் என அவர் சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும். சட்டத்திற்கு அவர் அப்பாற்பட்டவர் அல்ல.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் எதுவும் இல்லை. அவர், மருத்துவமனையில் இருப்பதை நீதி மன்ற காவலாக எடுத்து கொள்ள முடியாது. செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்த பிறகு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை நிராகரித்து மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |