மூன்று முறை ஆப்கான் பெண்ணின் கதவைத் தட்டிய தாலிபான்கள்... நான்காவது முறை: வெளிவரும் பகீர் சம்பவம்
வடக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு கிராமத்தில் தாலிபான்களுக்கு உணவு சமைக்க மறுத்த தாயார் ஒருவரை கொடூரமாக தாக்கி கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு குட்டி கிராமத்தில் குடியிருந்து வருகிறது Najia என்பவரின் குடும்பம். தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வரும் தகவல் அறிந்து அந்த கிராமமே பீதியில் இருந்துள்ளது.
எப்போது வேண்டுமானாலும் தாலிபான்கள் கிராமத்திற்குள் நுழையலாம் என அச்சத்தில் இருந்த நிலையில், ஜூலை 12ம் திகதி நடுங்க வைக்கும் இச்சம்பவம் அந்த கிராமத்தில் அரங்கேறியுள்ளது.
திடீரென்று ஒருநாள் Najia வீட்டின் கதவைத் தட்டிய தாலிபான்கள், தங்கள் குழுவினர் 15 பேர்களுக்கு உணவு சமைத்து தர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால் மிகவும் ஏழை குடும்பமான Najia அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தாலிபான்கள் நான்கு பிள்ளைகளின் தாயாரான அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதனால் சுருண்டு விழுந்த Najia, பின்னர் எழுந்திருக்கவில்லை, துப்பாக்கியால் கடுமையாக தாக்குதலுக்கு இலக்கான அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
ஏற்கனவே மூன்று முறை Najia வீட்டின் கதவைத் தட்டியும் திறக்காத நிலையில், நான்காவது முறை உணவு அளிக்கவும் மறுப்பு தெரிவித்ததால் தாலிபான்கள் வெறிச்செயலில் ஈடுபட்டதாக Najia-ன் மகள் 25 வயதான Manizha தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தாலிபான்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும்போது தங்கள் குடியிருப்புக்குள் கையெறி குண்டை வீசிவிட்டு சென்றதாகவும் Manizha கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.