நள்ளிரவில் ராட்சத கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 17 பேர் பரிதாப மரணம்
சாலை பணியின் போது நள்ளிரவில் ராட்ச கிரேன் திடீரென விழுந்ததில் தொழிலாளர்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
17 தொழிலாளர்கள் உயிரிழப்பு
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மும்பையில் இருந்து நாக்பூர் நகருக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிக்கு சம்ருத்தி மஹாமார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஷாஹாபூர் தாலுகாவிற்கு உட்பட்ட சர்லம்பே கிராமத்திற்கு அருகே நள்ளிரவு 12 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
தானே மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் பலரும் வேலை பார்த்து வருகின்றனர். அப்போது, இரு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், திடீரென கிரேன் சரிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து நடந்த உடனேயே, காவல்துறை, தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில், கிரேன் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
At least 17 workers were killed after a heavy-duty crane crashed on the girder of under-construction Phase III Mumbai-Nagpur #SamruddhiExpressway near Shahpur in Thane.#Thane #Maharashtra #Shahapur #NDRF pic.twitter.com/HUb2JCURcE
— Surya Reddy (@jsuryareddy) August 1, 2023
மேலும் அவர்,“தொழிலாளர்களின் மரணம் மிகவும் சோகமாகவும், இதயத்தை உலுக்குவதாகவும் உள்ளது. அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன் அவர்களது குடும்பத்தாரின் துயரில் பங்கு கொள்கிறோம். இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |