ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டது இதனால் தான்! அமைச்சர் கூறும் விளக்கம் என்ன?
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தைக்கு வலது கை அகற்றப்பட்ட விவகாரத்தில், குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தை முகமது மகிரின்,
குழந்தையின் தலையில் நீர்க்கட்டி இருந்ததால், கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பின்பு, ஒரு வருடமாக சென்னையில் தங்கி குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, குழந்தைக்கு தலையில் பொருத்தப்பட்டிருந்த ட்யூப், இயற்கை உபாதை கழிக்கும் போது வெளியே வந்ததால், மீண்டும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து, குழந்தையின் இடது கை, வலது காலின் வழியாக 'ட்ரிப்ஸ்' போடப்பட்டது.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த குழந்தைக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி வலது கையில் மருந்தை செலுத்தினார்கள்.
அப்போது, குழந்தையின் கை சிவப்பு நிறமாக மாறியதையடுத்து, தாய் அஜிஸா மருத்துவர்களிடம் தெரிவித்தார். அதை பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் வலது கையை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து எனக் கூறி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, குழந்தைக்கு தோள்பட்டை வரை கை அகற்றப்பட்டது. இதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,"குழந்தையின் விவகாரத்தில் நீங்களே முடிவு பண்ணிடக் கூடாது. நீங்கள் யாரும் மருத்துவர்கள் கிடையாது. இந்த குழந்தை 32 வாரங்களில் பிறந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு பல பிரச்னைகள் இருக்கும்.
குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால், கை தளர்ச்சி ஏற்பட்டு ரத்த உறைதல் ஏற்பட்டுள்ளது. பின்பு, ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர், குழந்தையின் பெற்றோரிடம் தெளிவாக தகவலைக் கூறியுள்ளனர்.
அதனைக் கேட்டு பெற்றோர்கள், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை சேர்த்தனர். அதன்பின்பு, குழந்தைக்கு கை அகற்றப்பட்டது.
இருப்பினும், பெற்றோர் கூறுவதை நாம் புறம் தள்ளிவிட முடியாது. அதனால், கல்லூரி முதல்வரை, சம்பந்தப்பட்ட மருத்துவ வல்லுநர்களை வைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளோம்.
தற்போது வரை விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று அல்லது நாளை மாலைக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
அதில் ஏதாவது கவனக்குறைவு ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனிடையே, நேற்று சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, குழந்தை இறந்து விட்டதாகவே கூறினார். ஒரு துறையை கேவலப்படுத்துகின்ற வகையில், ஒரு மக்கள் சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்ற துறைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் செய்திகளை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.
மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் சொல்லலாம். கவனக்குறைவு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்றரை வயதாகும் இந்தக் குழந்தையின் எடையானது, இயற்கையாக இருக்கும் எடையை விட பாதி தான் இருக்கிறது. பெற்றோர்கள் கேட்டுக் கொண்டால் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கவும் தயார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |