கொரோனா பெருந்தொற்றின் தொடக்கம்: மொத்தமாக புரட்டிப்போட்ட WHO நிபுணர்களின் கண்டுபிடிப்பு
கொரோனா பெருந்தொற்றின் தொடக்கம் தொடர்பில், இதுவரை நம்பப்பட்டு வந்த இரு முக்கிய காரணங்களை உலக சுகாதார அமைப்பு, ஆய்வுக்கு பிறகு முற்றாக புறந்தள்ளியுள்ளது.
உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக வதைத்துவரும் கொரோனா பெருந்தொற்றின் தொடக்கம், சீனாவின் ஹுவானன் கடல் உணவு சந்தையில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் அல்லது, வுஹான் ஆய்வகத்தில் இருந்து கவனக்குறைவால் வெளியேறி, மனிதர்களில் பரவி இருக்கலாம் என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது.
ஆனால் இந்த இரு கூற்றுகளையும், மிக நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பினூடே உலக சுகாதார அமைப்பு முற்றாக மறுத்துள்ளது.
மட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பின் இந்த கருத்தானது, சீனா இதுவரை கூறி வந்த, தங்கள் நாட்டு எல்லைக்கு வெளியே இருந்தே கொரோனா தோன்றியது என கூற்றை ஒப்புக்கொள்வதாகவே அமைந்துள்ளது.
மேலும், சீனாவில் இதுவரை தாங்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பெருந்தொற்றின் தொடக்கம் கண்டறிய முடியவில்லை என்றே உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி வுஹான் மாமிச சந்தையில் இருந்தும் கொரோனா பரவி இருக்க வாய்ப்பில்லை என்றே உலக சுகாதார அமைப்பின் கண்டுபிடிப்பாக உள்ளது.
ஆனால், வுஹான் மாமிச சந்தையில் கொரோனா தொற்று கண்டறியப்படுவதற்கு முன்னரே, சீனாவின் வேறு சில பிராந்தியங்களில் கொரோனா பாதிப்பு இருந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் தோற்றம் தொடர்பில் உண்மையை கண்டறிய உலக சுகாதார அமைப்பின் 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு ஜனவரி 14ல் சீனா சென்றடைந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவை, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அந்த குழு வெளிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், கொரோனா பெருந்தொற்றின் தொடக்கம் தொடர்பான மர்மம் இன்னமும் விலகாமலே உள்ளது.

