பிரம்பால் அடித்து மாணவனுக்கு கை, கால் வீக்கம்... ஆசிரியரை தாக்கிய பெற்றோர்
இந்திய மாநிலம் தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியரை பெற்றோர் சரமாரி தாக்கி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனை அடித்ததால் கை, கால் வீக்கம்
தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு நகரைச் சேர்ந்த தம்பதியினர் சுரேஷ்பாபு மற்றும் செவ்வந்தி.
இவர்களுக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார். இவர், குருவராஜகண்டிகை அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.
இவர், நேற்று பள்ளியில் துடுக்காக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதனால், பள்ளியின் தற்காலிக ஆசிரியர் மோகன் பாபு மாணவனை பிரம்பால் அடித்துள்ளார்.
பின்பு, மாணவனின் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
மாணவனுக்கு ஒத்தடம்
மாணவனை வீட்டிற்கும் அனுப்பாமல், மருத்துவமனைக்கும் அழைத்து செல்லாமல் பள்ளியில் வைத்தே வீங்கிய இடங்களில் ஒத்தடம் கொடுத்துள்ளனர்.
இரவு 8 மணி வரை ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்துவிட்டு பின்பு மாணவனை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து, வீட்டிற்கு சென்ற மாணவன் பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவிக்கவில்லை.
ஏனென்றால், வீட்டில் சொன்னால் பள்ளியை விட்டு நிறுத்திவிடுவதாக ஆசிரியர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர், மாணவன் காலையில் எழுந்ததும் கை மற்றும் கால்கள் வீங்கியதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை
இது குறித்து, மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு சென்று கேட்ட போது தற்காலிக ஆசிரியர் மோகன் பாபு தாக்கியது தெரியவந்தது.
இதனால் கோபமான மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியரை அடித்து உதைத்து சரமாரி தாக்கியுள்ளனர்.
மேலும், நியாயம் கேட்டு பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடந்து கலைந்து போக கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |