வெளிநாடு ஒன்றில் பிரித்தானியரை பிணைக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்ட நபர்: அவர் துணிந்து செய்த செயல்
நெதர்லாந்தில் பிரித்தானியர் ஒருவரைப் பிணைக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்ட நபர் ஒருவர், தனக்கு 200 மில்லியன் யூரோக்கள் கொடுத்தால்தான் அவரை விடுவதாக நிபந்தனை விதித்தார்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்பிள் ஸ்டோர் ஒன்றினுள், அந்த நபர் அந்த பிரித்தானியருக்குக் கைவிலங்கிட்டு, அவர் முன் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகின.
பொலிசார் அப்பகுதியில் குவிந்து நடவடிக்கை எடுப்பது குறித்து திட்டமிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென அந்த 44 வயது பிரித்தானியர், தன்னைப் பிடித்து வைத்திருந்தவரிடமிருந்து தப்பியோடினார்.
அந்த நபர் அவரைத் துரத்த, சட்டென பொலிஸ் கார் ஒன்று அந்த கடத்தல்காரர் மீது மோத, அவர் சாலையில் விழுந்தார்.
பொலிசார் அவரை சோதனையிட்டதில் அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவர, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
200 மில்லியன் யூரோக்கள் பிணைத்தொகை கோரப்பட்ட நிலையில், அந்த பிரித்தானியரின் துணிச்சலாலும், சமயோகித நடவடிக்கையாலும் பணம் எதுவும் கொடுக்கப்படாததோடு, அவரும் தப்பியதோடு, குற்றவாளியும் பொலிசில் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.