சூயஸ் கால்வாயில் விபத்துக்குள்ளான கப்பலில் இருக்கும் அனைவரும் இந்தியர்கள்! அவர்களின் நிலை குறித்து வெளியான தகவல்
சூயஸ் கால்வாயில் விபத்துக்குள்ளாகி சிக்கிக்கொண்டிருக்கும் எவர் கிவன் சரக்கு கப்பலின் கேப்டன் உட்பட குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ever Given எனும் சரக்கு கப்பல் சுமார் 2 லட்சம் டன் எடைகொண்ட சரக்குகளுடன் 20,000 கண்டெயினர்களை ஏற்றிக்கொண்டு சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அந்தக் கப்பல் கடந்த 23-ஆம் திகதி சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது ஏற்பட்ட கடுமையான புழுதி புயல் காரணமாக விபத்துக்குள்ளாகி, குறுக்கும் நெடுக்குமாக கால்வாயை மொத்தமாக மறித்தபடி சிக்கிக்கொண்டது.
இதனால், உலகின் மிக முக்கியமான மற்றும் பிஸியான கடல்வழி பாதையான சூயஸ் கால்வாயின் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
இந்த கப்பலை மீண்டும் பாதையில் நேராக திருப்பிவிட மிக உயர்ந்த அலைகள் தேவைப்படுவதால், அதனை மீட்க இன்னும் 2 வாரங்கள் கூட ஆகலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கப்பலை இயக்கிய கேப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 25 பேரும் இந்தியர்கள் என தெரிவந்துள்ளது.
மேலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகம் கப்பலுக்கு உரிமையாளரான Shoei Kisen Kaisha நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கப்பல் கால்வாயில் மாட்டிக்கொண்டதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்களால் Shoei Kisen Kaisha நிறுவன தலைவர் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், கப்பலில் தொழிநுட்ப கோளாறுகளோ, இன்ஜின் கோளாறுகளோ ஏற்படவில்லை என தெரிவந்துள்ளது.
2018-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட Ever Given கப்பல் 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரே சமயத்தில் 20,000 கன்டெயினர்களை ஏற்றிச் செல்லக்கூடியது மற்றும் 22.8 நாட்டிகள் மைல் வேகத்தில் பயணிக்கக்கூடியது.


