ஐரோப்பாவை உலுக்கும் மூன்றாவது அலை... தடுப்பூசி குளறுபடி: பிரித்தானியாவை எச்சரிக்கும் அரசு விஞ்ஞானிகள்
ஐரோப்பிய நாடுகளை அபாயகரமான கொரோனா மூன்றாவது அலை மொத்தமாக முடக்கி வரும் நிலையில், இதன் தாக்கம் ஒரே வாரத்திற்குள் பிரித்தானியாவில் எதிரொலிக்கும் என்ற அச்சத்தை அரசு விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதில் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக, கொரோனா பரவல் சரசரவென அதிகரிக்க, தற்போது முழுமையான ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு திரும்பியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததன் முதன்மை காரணமாக கூறப்படுவது, பல நாடுகளில் தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி, தலைவர்களுக்கு இடையே நடக்கும் அரசியல் போட்டிகள், கொரோனா தடுப்பூசி தொடர்பில் மக்களுக்கு இருக்கும் அச்சம் உள்ளிட்டவையே என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பாவின் இந்த தடுமாற்றம், பிரித்தானியாவின் இதுவரையான கடும் முயற்சிகளை மொத்தமாக சிதைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசு விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பாக எச்சரிக்கையான அணுகுமுறையை எடுக்குமாறு பிரித்தானியா அரசாங்கத்தை விஞ்ஞானிகள் குழு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், ஊரடங்கில் இருந்து வெளியேற பிரதமர் ஜோன்சன் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் மாற்றம் எதுவும் கொண்டுவர வேண்டாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கென்ட் பகுதியில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றால், கடந்த டிசம்பர் பிற்பகுதியில் பிரித்தானியாவில் பாதொப்பு எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்தது.
தற்போது அதே நிலை ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.