உலகமே ரஷ்யாவுக்கு எதிராக நிற்கிறது... போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்: ரஷ்ய முன்னாள் தளபதி எச்சரிக்கை
ரஷ்ய தரப்பிலிருந்தே முன்னாள் தளபதி ஒருவர் போரை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் ரஷ்யாவுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.
முன்னாள் ரஷ்ய விமானப்படைத் தளபதியும், சோவியத் யூனியனின் தலைசிறந்த இராணுவப் பள்ளிகளில் பயின்றவருமான Mikhail Khodarenok என்பவர், போர் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்வதாகவும், அது இன்னமும் மோசமாகும் என்றும் கூறியுள்ளார்.
இதுவரை ரஷ்ய அரசு கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்க, அதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த ரஷ்ய மக்களில் பல மில்லியன் பேர் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற Mikhail, உண்மை நிலவரத்தை உடைத்துப் பேசியிருக்கிறார்.
உக்ரைன் இராணுவத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று கூறப்படுவது வதந்தி, அதில் உண்மையில்லை என்று கூறியுள்ள Mikhail, இப்போதும் உக்ரைன் இராணுவத்தால் ஒரு மில்லியன் உக்ரைனியர்கள் கையில் ஆயுதங்களைக் கொடுக்கமுடியும் என்கிறார்.
மேற்கத்திய நாடுகளின் நவீன ஆயுதங்கள், நேட்டோ படைகளிடம் பெறும் பயிற்சி என ஒரு மில்லியன் உக்ரைன் வீரர்கள் போருக்கு வந்து நிற்பார்கள் என்கிறார் அவர்.
ஆனால், அவர்கள் பயிற்சி பெறும் கத்துக்குட்டிகளாகத்தானே இருப்பார்கள் என தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்க, அவர்கள் இப்போதுதான் பயிற்சி பெறுபவர்களா ஏற்கனவே நல்ல பயிற்சி பெற்றவர்களா என்பது முக்கியமில்லை, அவர்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம் என்று கூறும் Mikhail, உக்ரைனியர்களைப் பொருத்தவரை தாய்நாட்டைக் காக்கவேண்டும் என்ற தீராத ஆவல் அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே, கடைசி வீரர் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் போராடுவார்கள் என்கிறார்.
உலகமே ரஷ்யாவுக்கு எதிராக நிற்கிறது போல் உள்ளது என்று கூறும் Mikhail, போரை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் நல்லது என்கிறார்.
உண்மை நிலையை உணர்ந்து செயல்படாவிட்டால், நாளை வரலாற்றின் உண்மை நம்மை கடுமையாக தாக்கும், பிறகு நாம் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்கிறார் Mikhail.
பிரச்சினை என்னவென்றால், பல மில்லியன் ரஷ்யர்கள் பார்க்கும் அரசு தொலைக்காட்சியில் இப்படி Mikhail வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார். நாளை அவரது நிலைமை என்ன ஆகும் என்பது தெரியவில்லை!