அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது... ட்ரம்ப் விடுத்த மிரட்டல்
அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், நோபல் பரிசை தமக்கு நிராகரித்ததன் பின்னர், இனி அமைதியைப் பற்றி பரப்புரை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார்.
இராணுவ நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்றும் தனது நோக்கங்களைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

தனது கோரிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான சிலருக்கு, கூடுதல் வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியதுடன், அந்தத் தீவு மீதான சீன மற்றும் ரஷ்ய அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வன்முறையைப் பயன்படுத்துவாரா என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை, குறிப்பாக டென்மார்க்குடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்காத நிலையில் இந்த சிக்கல் உருவாகியுள்ளது.
கிரீன்லாந்து மீது இராணுவ நடவடிக்கை சாத்தியமா என்ற கேள்விக்கு, ட்ரம்ப் பதிலளிக்க மறுத்துள்ளார். அத்துடன், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிடுவதை விடுத்து, உக்ரைனில் கவனம் செலுத்தட்டும் என்றார்.

அவசியமில்லை
ஐரோப்பா மற்றும் தனது நேட்டோ கூட்டாளிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், கிரீன்லாந்தை ஏதேனும் ஒரு வழியில்' கைப்பற்றுவோம் என்ற அச்சுறுத்தல்கள் மூலம் ட்ரம்ப் நெருக்கடி அளித்து வருகிறார்.
கிரீன்லாந்தின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு குறித்து ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை, டென்மார்க் மற்றும் மற்ற ஏழு ஐரோப்பிய நாடுகளின் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அவர் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

மேலும், நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதன் பின்னரே, தாம் உலக விவகாரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும், இனி அமைதியைப் பற்றி பரப்புரை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே நார்வே மீதும் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |