மூன்றாவது இரவு தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா... ஹார்முஸ் முற்றுகை அறிவிப்பு
ஈரான் மீது கடல்வழி முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக அந்நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடுமையாகத் தாக்குவோம்
அத்துடன், ஈரான் அறிவித்திருந்த கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை, இனி அமெரிக்கா முன்னெடுத்து, பாதுகாப்பான பயணத்திற்காகக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது முன்னெடுக்கப்படும் இந்தத் தாக்குதலானது ஈரானியப் படைகளுக்குக் கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்றும் ஹார்முஸ் நீரிணையில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் அவர்களின் திறனைக் குறைக்கும் என்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று இரவு அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம், நாளையும் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம், அதைப்பற்றி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போருக்கு முன்னதாக இருந்தது போலவே, ஹார்முஸ் நீரிணை எவ்விதக் கட்டணமும் இன்றி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா இதுவரை கூறி வந்துள்ளது.
அமெரிக்காவோ அல்லது ஈரானோ கட்டணம் வசூலிக்க முயற்சிப்பது, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் குறித்த உலகளாவிய நெறிமுறைகளை மீறுவதோடு, அப்பிராந்தியத்தையும் தாண்டி மேலும் பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதலை அமெரிக்கா தொடங்கியதை அடுத்து, சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை திங்களன்று 7.8 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 81.92 டொலராக இருந்தது; இருப்பினும், இது போரின் உச்சக்கட்டத்தில் எட்டப்பட்ட 120 டொலர் விலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
முன்னதாக திங்களன்று, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீத சுங்க வரியை அமெரிக்கா கோரும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
தடை இருக்காது
மட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா அறியப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இஸ்ரேல் ஆதரவுடன் ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து, அடிக்கடி வெற்றி பெற்றதாகக் கூறுவது உட்பட, ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள ஈரான் கெஞ்சுவதாகவும் ட்ரம்ப் பலவிதமான தற்பெருமைகளையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்துள்ளார்; அடிப்படையில், இவை எதும் உண்மை அல்ல என்பதும் வெறும் வாய்ச்சவடால் என்றே தெரிய வந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்கக் கடற்படையின் தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையம் திங்கள்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் மீதான முற்றுகையை, அனைத்துத் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமெரிக்கா அமுல்படுத்தத் தொடங்கும் என்று தெரிவித்தது.
மட்டுமின்றி, ஈரான் அல்லாத இடங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியான நடுநிலையான போக்குவரத்திற்குத் தடை இருக்காது என்றும் அந்த மையம் தெரிவித்தது. ஆனால், நடைமுறையில் அமெரிக்காவின் கடற்படை இதைச் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கும் என்பது தெளிவாக இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |