கொரோனா தடுப்பூசிப் போட மறுப்பா? இது தான் கதி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாடு
கொரோனா தடுப்பு மருந்தைப் போட மறுத்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தா ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஜகர்த்தா ஆளுநர் அகமத் ரிசா கூறும்போது, 'ஜகர்த்தா குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தைப் போட மறுத்தால் 356.89 டொலர்( உள்ளூர் மதிப்பில் 5 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
ஜகர்த்தா அதிகாரில் கொரோனா விதிகளை பின்பற்றுவதில் மெத்தனமாகவே உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கை, அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றார் ஆளுநர் அகமத் சிசா.
மேலும், தடுப்பு மருந்துப் போட மறுக்கும் குடிமக்களுக்கு இனி அரசு உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 34,000 பேர்கள் இறந்துள்ளதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.
இதனால், கொரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அடுத்த 15 மாதங்களில் மொத்தமுள்ள 270 மில்லியன் குடிமக்களில் 181.5 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டமிட்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது. இந்நிலையில், பைசர் கரோனா தடுப்பு மருந்து மற்றும் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தோனேசியா பொதுமக்களுக்கு அளித்து வருகிறது.