ஸ்தம்பித்த காபூல் விமான நிலையம்... கடைசி விமானத்திற்காக குவிந்த மக்களால் கூட்ட நெரிசல்
ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி விமானங்களில் வெளியேறுவதற்கான தீவிர முயற்சியில் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் நுழைந்துள்ளனர்.
தாலிபான் தீவிரவாத அமைப்பின் கைகளில் ஆப்கானிஸ்தான் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தீவிரவாத அமைப்பின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
இதனால் நாட்டின் பிரதான விமான நிலையம் அமைந்துள்ள தலைநகர் காபூலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லை எனவும், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே விமான நிலையத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டின் தூதரகம் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Desperate situation unfolding at #Kabul airport this morning.#Afganistan pic.twitter.com/EMgK3rduOL
— BANDIT XRAY ?? ⚔ (@BANDIT_XRAY) August 16, 2021
300 பேர்கள் மட்டுமே பயணிக்க பயன்படுத்தப்படும் விமானத்தில் சுமார் ஆயிரம் பேர்கள் புறப்பட முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. இனி பயணிகள் விமானங்கள் அனைத்தும் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வாய்ப்பில்லை என்றும், ராணுவ ஹெலிகொப்டர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு தாலிபான் அமைப்பு தாங்கள் வெற்றியடைந்துள்ளதாக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.