பாகிஸ்தானின் கொடுஞ்செயல்... கொல்லப்பட்ட மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள்
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய மோசமான வான்வழித் தாக்குதலில் மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோன் தாக்குதல்களில்
வெள்ளிக்கிழமை உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்ட எட்டு பொதுமக்களில், கிரிக்கெட் வீரர்களான கபீர் ஆகா, சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகியோர் அடங்குவர், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவமானது இரு நாடுகளுக்கும் இடையேயான 48 மணி நேர போர் நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. பக்திகா மாகாணத்தின் தலைநகரான ஷரானாவில் நடந்த நட்புரீதியான போட்டியில் கலந்து கொண்டு வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் குறிவைக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பாகிஸ்தான் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான தாக்குதல் இதுவென்றும் சாடியுள்ளது.
இந்தத் தாக்குதலை அடுத்து, நவம்பர் 17 முதல் 29 வரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் திட்டமிடப்பட்டிருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகுவதாகவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
காட்டுமிராண்டித்தனமானது
இந்தியாவின் BCCI நிர்வாகமும் மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் துயர இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவமானது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சமூகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
இந்த தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்று ஆப்கான் அணித்தலைவர் ரஷீத் கான் சாடியுள்ளார். மேலும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியுள்ளதையும் ரஷீத் கான் வரவேற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |