ஒரே நாளில் 3 பதக்கம் வென்ற துளசிமதி - ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்
cm vijay announce 1.25 crore incentive for thulasimathi murugesan for hatrick medal: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஒரே நாளில் 3 பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் துளசி அறிவுமதிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஒரே நாளில் 3 பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அக்டோபர் 18 முதல் 24 வரை நடைபெறுகிறது.
30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் உட்பட 114 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனையான துளசிமதி முருகேசன், இன்று ஒரே நாளில் ஒரு தங்கப் பதக்கத்தையும், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளார்.
மானசி ஜோஷியுடன் இணைந்து மகளிர் இரட்டையர் (SL3-SU5) பிரிவில் போட்டியிட்ட துளசிமதி, சீனாவின் யாங் கியூக்ஸியா மற்றும் சியாவோ ஜுக்ஸியான் இணையை 21-16, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றனர்.

முன்னதாக, மகளிர் ஒற்றையர் (SU5) பிரிவின் இறுதிப் போட்டியில், துளசிமதி சீனாவின் யாங் கியூக்ஸியாவிடம் 18-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

மேலும், கலப்பு இரட்டையர் (SL3-SU5) பிரிவின் இறுதிப் போட்டியில் நிதேஷ் குமாருடன் இணைந்து விளையாடிய துளசிமதி, இந்தோனேசியாவின் லியானி ராத்ரி ஒக்டிலா மற்றும் ஹிக்மத் ரம்தானி இணையிடம் 21-11, 19-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து, மற்றொரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்
ஒரே நாளில் 3 பதக்கங்களை வென்ற துளசிமதி முருகேசனுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், அவ்வணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்! வீராங்கனை துளசிமதி முருகேசன் அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். #CMJosephVijay
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 23, 2026
மேலும், துளசிமதி முருகேசனின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.