ஜெயலலிதாவுக்கு அந்த சம்பவம் நடக்கவில்லை! நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் பதில்
தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புடவை இழுக்கப்பட்டது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் பேசியது
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா புடவையை இழுத்தார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் அவரை பார்த்து சிரித்தனர்.
பின்பு ஜெயலலிதா, முதல்வரான பிறகு தான் சட்டமன்றத்திற்கு வருவேன் என சபதம் எடுத்தார். அதே போல் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் ஆனார்.
திரௌபதியை பற்றி பேசுகிறீர்கள், கௌரவர்களின் சபை பற்றி பேசுகிறீர்கள், ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு திமுக மறந்துவிட்டதா" என்றார்.
தமிழக முதல்வரின் பதில்
இதற்கு ஆங்கில நாளிதழ் நேர்காணல் ஒன்றில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"நிர்மலா சீதாராமன் வாட்ஸ் அப்பில் வரும் வரலாற்றை பார்த்து பேசுகிறார். தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.
அது, அவரால் நடத்தப்பட்ட நாடகம் என்பது அவையில் இருந்த அனைவருக்கும் தெரியும். இந்த மாதிரி ஒரு சம்பவத்தை சட்டமன்றத்தில் நிகழ்த்த வேண்டும் என்று ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ஒத்திகை பார்த்துள்ளார். அந்த சம்பவத்தின் போது உடனிருந்ததாக கூறிய திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு (முன்னாள் அமைச்சர்) அவையில் பேசிய குறிப்பு இன்றும் உள்ளது.
இதனால், தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்ததை பொய்யாக பேசிய நிர்மலா சீதாராமனின் பேச்சு வருந்தத்தக்கது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |