ரூ.6000 நிவாரண நிதி திட்டத்தை தமிழக முதலமைச்சர் இன்று தொடங்கிவைத்தார்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி திட்டத்தை தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மிக்ஜாம் புயல்
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் காரணமாக கடந்த டிசம்பர் 3, 4, 5 திகதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கி தண்ணீர் வடிய 10 நாட்களுக்கும் மேல் ஆனதால், மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகினர்.
PTI
இதையடுத்து இந்த 4 மாவட்ட மக்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6,000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நிவாரண நிதி
ரூ.6000 நிவாரண நிதி ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரும், ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது.
தொடர்ந்து, இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த டோக்கன்கள் வழங்கும் பணியை விரைவுபடுத்துவதற்காக இன்று 4 மாவட்டங்களிலும் ரேசன் கடைகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து நிதியுதவியை வழங்கினார்.
மேலும் இத்திட்டத்திற்காக ரூ.1,445 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |