செந்தில் பாலாஜி விவகாரம்! முதலமைச்சரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர் - மேலும் அதிகரிக்கும் பதற்றம்
தமிழக முதலமைச்சர் ஜப்பானில் இருந்து திரும்பியதுமே அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர கூடாது என தெரிவித்து, ஆளுநர் ஆர்.என் ரவி கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி அமைச்சரவை பொறுப்புகள் மாற்றம்
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனையை தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு தாக்குதல் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி அல்லி நாளை ஒத்தி வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை பொறுப்பை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை பொறுப்பை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் உடல்நல குறைவு காரணமாக செந்தில் பாலாஜி வசம் இருக்கும் அமைச்சரவை பொறுப்புகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அமைச்சர் பொன்முடி பேட்டி
இந்நிலையில் அமைச்சர்களுக்கு துறைகளை வழங்குவது என்பது முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்ட செயல், இதனை ஆளுநருக்கு தெரியப்படுத்துவது மாநில அரசின் கடமை.
ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பா.ஜ.கவின் ஏஜெண்டாக செயல்படுவதோடு மட்டுமில்லாமல், முதலமைச்சர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.
இருப்பினும் தமிழக முதலமைச்சர் அந்த கடிதத்தை மீண்டும் அனுப்பியுள்ளார், இந்த முறை ஆளுநர் ஆர்.என் ரவி இதனை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம் என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜப்பானில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பியதுமே செந்தில் பாலாஜி மீதான குற்ற வழக்குகளை சுட்டிக் காட்டி அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருந்தார்.
அப்படி பார்த்தால் ஒன்றிய அமைச்சரவையில் இருக்கும் 33 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது என்பதையும் அமைச்சர் பொன்முடி சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.