சோகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ்! சொந்த தொகுதிகளில் அதிமுகவை பந்தாடிய திமுக
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், அதிமுக தலைவர்களின் கோட்டைகள் என கருத்தப்பட்டு வந்த பல பகுதிகளை திமுக தகர்த்தெறிந்துள்ளது.
தமிழக வரலாற்றை எடுத்துக்கொண்டால் சட்டமன்ற தேர்தலோ அல்லது உள்ளாட்சி மன்ற தேர்தலோ, ஒவ்வாரு கட்சிக்கும் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களின் தொகுதி அவர்களின் கோட்டைகளாவே திகழும்.
மேலும் கட்சி தலைவர்களின் செல்வாக்கை அடிப்படையாக கொண்டு இந்த தொகுதியில் இந்த கட்சி தான் வெற்றி பெரும் என்று முன்னரே கணிக்கப்படும் நிலையில் அந்த மரபை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உடைத்து தூள்தூளாக்கியுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது.
மேலும் அவர் வசிக்கும் நெடுஞ்சாலை நகர் 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றிபெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து, தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னிர்செல்வம் அவர்களின் சொந்த தொகுதியான போடிநயக்கனூர் - குச்சனூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
மொத்தமுள்ள 12 வார்டுகளில் 11 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது.
இதைப்போலவே அதிமுகவின் கோட்டைகளாக விளங்கும் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொகுதியான உடுமலை, மேலும் முன்னாள் அமைச்சர்களின் சொந்த தொகுதிகளான பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் , கோவை ஆகிய பல பகுதிகளில் அதிமுக படுதோல்வி அடைந்து தலைவர்களின் கோட்டை என்ற கருத்தை உடைத்து நொறுக்கியுள்ளது இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.