ஒலிம்பிக் போட்டி: 40,000 டொலருக்கு டிக்கட் வாங்கிய ரசிகர் ஏமாற்றம்!
ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாகக் காண்பதில் சாதனை படைக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஜப்பானியர் இப்போது பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
கசுனோரி தகிஷிமா, 45 (Kazunori Takishima) என்னும் அந்த நபர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காகச் சுமார் 40,000 டொலருக்கு நுழைவுச்சீட்டுகளை வாங்கியுள்ளார்.
COVID-19 நோய்த்தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்பாட்டுக்குழு அண்மையில் தெரிவித்ததிலிருந்து கசுனோரி செய்வதறியமால் உள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாகச் சென்று காண்பதில் உலகச் சாதனை படைக்க வேண்டும் என்பது அவரது கனவு. அதற்காகப் பல ஆண்டுகளாகப் பணம் சேமித்தும் வருகிறார் கசுனோரி.
முன்பு விளையாட்டில் ஆர்வமில்லாத கசுனோரிக்கு 2006அம் ஆண்டு இத்தாலியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கு விளையாட்டைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியைக் கண்ட பிறகு ஒரு ஒலிம்பிக் போட்டியைக் கூட விட்டுவைக்கவில்லை. அனைத்திற்கும் சென்றார்.
ஒலிம்பிக் போட்டிகளில் வீரர் வீராங்கனைகள் பதக்கம் வெல்லும் போது அது தம்மைக் கடினமாக உழைக்க ஊக்குவிப்பதாக கசுனோரி கூறினார். கசுனோரி இதுவரை 106 ஒலிம்பிக் விளையாட்டுகளை நேரில் கண்டுள்ளார்.
இம்முறை 28 விளையாட்டுகளுக்கு 100 நுழைவுச்சீட்டுகளை தனது உறவினர் மற்றும் நண்பர்களுடன் வாங்கியிருந்தார். ஆனால், இந்த முறையோ அவரது ஆசை நிறைவேறாமல் போனது.
அதனால், தனது வருத்தங்களை அழுது வெளிப்படுத்திவிட்டு, அடுத்த ஆண்டு பெய்ஜிங் நகரத்திலும், அதனைத்தொடர்ந்து 2024-ஆம் ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளைக் காண எதிர்பார்ப்புடன் உள்ளார் கசுனோரி.
அவர் செலவு செய்த நுழைவுச் சீட்டுகளுக்கான தொகை அவருக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.