சித்திரவதை, கொடூர பட்டினி... அடையாளம் காண முடியாமல் உருக்குலைந்த பாலஸ்தீன கைதிகள்
ஹமாஸ் படைகள் பணயக்கைதிகளை விடுவித்ததற்கு ஈடாக இஸ்ரேல் நிர்வாகம் கிட்டத்தட்ட 2,000 கைதிகளை விடுவித்த நிலையில், மொத்தமாக சிதைக்கபப்ட்டுள்ள காஸாவில் பாலஸ்தீனிய மக்களிடையே முதல் முறையாக மகிழ்ச்சி காணப்பட்டது.
அடக்குமுறை, சித்திரவதை
ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமாதான ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து, இஸ்ரேல் சிறைகளில் வாடிய பல நூறு பாலஸ்தீன கைதிகள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துள்ளனர்.
ஆனால் பலர் தற்போதும் வெளிநாடுகளுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்கின்றனர். நெதன்யாகு நிர்வாகம் விடுவித்துள்ள கைதிகளில் ஒருவர் தெரிவிக்கையில், இஸ்ரேல் சிறையில் இருந்த காலகட்டத்தில் தாம் சுமார் 59 கிலோ உடல் எடையை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
மேற்கு கரையை சேர்ந்த 51 வயதான கமல் அபு ஷானா என்ற அந்த நபர் தெரிவிக்கையில், கொடூரமான பட்டினி, நியாயமற்ற நடத்தைகள், அடக்குமுறை, சித்திரவதை மற்றும் மிக மோசமான வசை என எவரும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் பலருக்கும் அவரை அடையாளம் காண முடியவில்லை. உருக்குலைந்து, மிக மோசமான நிலையில் கமல் வீடு திரும்பியுள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை நகரமான பெய்துனியாவிற்கு திங்கட்கிழமை இரண்டு பேருந்துகளில் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலையான ஆண்கள் அனைவரும் தலை மொட்டையடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை தாக்கிய விவகாரத்தில் கைதானவர்களே, தற்போது விடுவிக்கப்பட்டவர்கள்.
ஆனால், அரசியல் காரணங்களுக்காக, பழி தீர்க்கும் வகையில் கைது செய்யப்பட்டவர்களே பெரும்பாலானவர்கள் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பாலஸ்தீனியருக்கும் இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் இருக்கிறார் என்பதே மறுக்க முடியாத வரலாறு.
வருடக்கணக்காக
பல தசாப்த கால இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்க்கும் சுதந்திரப் போராளிகளாகவே கைதிகள் ஒவ்வொருவரையும் பாலஸ்தீன மக்கள் கருதுகின்றனர்.
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 2,000 கைதிகளில் சுமார் 1700 பேர்கள், காஸா போரின் போது கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்கள். இதில் 250 பேர்கள் கொலை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளால் வருடக்கணக்காக இஸ்ரேல் சிறையில் வாடியவர்கள்.
40 வருடங்கள் சிறை விதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களும் உள்ளனர். தண்டனை பெற்ற 250 பாலஸ்தீனியர்களில் சிலர் கிழக்கு ஜெருசலேம் அல்லது மேற்குக் கரைக்குத் திரும்புவார்கள், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் காஸாவுக்கு அனுப்பப்படுவார்கள்.
கைதிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து மேற்கு கரையில் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. தற்போதும், 1300 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |