ஜேர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி என தகவல்
ஜேர்மனியில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
பவேரியா மாநிலத்தில் முனிச் பகுதியின் தென்மேற்கில் உள்ள எபென்ஹவுசென்-ஷாஃப்ட்லார்ன் நகரின் S-Bahn நகர்ப்புற ரயில் நிலையத்திற்கு அருகே திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளனர் என முனிச் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், மோதலுக்குப் பிறகு பாதைக்கு அருகில் பயணிகள் நிற்பதைக் காட்டுகிறது, மேலும் ரயிலின் ஒரு பகுதி தடம் புரண்டு இருப்பதும் தெரிகிறது.
Picture: AP
200-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் அதிகாலை வரை சம்பவ இடத்திற்கு வந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். காயமடைந்த ஒருவர் முதலில் வண்டிக்குள் சிக்கிக் கொண்டார், ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்டார் எனறு அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், ஜேர்மனியின் பவேரியா பகுதியில் தண்டவாளம் மூடப்பட்டு ரயில் மாற்று பேருந்து சேவைகள் இயங்கும் என முனிச் பொலிஸார் தெரிவித்தனர்.
ரயிலில் இருந்த பயணிகள், தாங்கள் பலத்த சத்தத்தை உணர்ந்து முன்னோக்கி தூக்கி வீசப்பட்டதாக் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே பகுதியில் இரண்டு S-Bahn ரயில்கள் ஏறக்குறைய மோதிக்கொண்டன, ஆனால் இரண்டு டிரைவர்களும் சரியான நேரத்தில் பிரேக் பிடித்து பெரும் விபத்தை தடுத்ததாக கூறப்படுகிறது.