சிசிடிவியில் சிக்கிய காட்சி! குப்பை கொட்டி விட்டு சென்ற வளர்ப்பு நாய்: உரிமையாளருக்கு அபராதம்
இத்தாலியில் தன்னுடைய வளர்ப்பு நாய் மூலம் குப்பை கொட்டிய நபருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
சிசிடிவியில் சிக்கிய காட்சி
இத்தாலியின் சிசிலி மாகாணத்தில் உள்ள கட்டானியாவின் சான் ஜார்ஜியோ பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் வளர்ப்பு நாய் ஒன்று குப்பை கொட்டி விட்டு செல்லும் காட்சி தற்போது கவனிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், வளர்ப்பு நாய் ஒன்று பெரிய குப்பை பை ஒன்றை தன்னுடைய வாயில் கவ்விக் கொண்டு வந்து அந்த குப்பை பையை குறிப்பிட்ட இடத்தில் போட்டு விட்டு திரும்பி செல்கிறது.

உள்ளூர் சிசிடிவி காட்சிகளை அப்பகுதி சுற்றுச்சூழல் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்த போது இந்த சம்பவத்தை கண்டுபிடித்துள்ளார்.
அத்துடன் நடத்தப்பட்ட விசாரணையில், குப்பையை கொட்டுவதற்கு நாய்க்கு அதன் உரிமையாளர் முறையான பயிற்சி கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செல்லப்பிராணிக்கு தன்னுடைய சுயநலத்திற்காக குப்பை கொட்டும் பயிற்சியை கொடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது என்று கட்டானியா நகர அதிகாரிகள் சமூக ஊடகத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அபராதம்
தற்போது நாயின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, அவருக்கு சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இத்தாலியின் சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் அபராதமானது யூரோ 1.500 முதல் யூரோ 18,000 வரை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |