இராணுவ அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா: அவர்களின் குற்றம்
சவுதி அரேபியாவில் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் இருவரை தேசத்துரோக குற்றவாளிகள் என குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இராணுவக் குற்றங்கள்
குறித்த இருவரும் சவுதி அரேபிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் எனவும், ஒருவர் லெப்டினன்ட் கர்னல் மஜித் பின் மூசா அல்-பாலாவி எனவும் இன்னொருவர் தலைமை சார்ஜென்ட் யூசெப் பின் ரெடா ஹசன் அல்-அசோனி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் பல இராணுவக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு அவர்கள் செப்டம்பர் 2017ல் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய விசாரணைக்குப் பிறகு, அல்-பாலாவி இராணுவத் துரோகத்திற்காக தண்டிக்கப்பட்டார்.
அத்துடன் தேசத்தின் நலன்களையும் அதன் இராணுவ சேவையின் கௌரவத்தையும் பாதுகாக்க தவறியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அல்-அசோனி மீதான விசாரணையின் விளைவாக, உயர், தேசிய மற்றும் இராணுவம் ஆகிய மூன்று வடிவங்களில் அவர் தேசத்துரோகத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்
அத்துடன் தேசத்தின் நலன்கள் மற்றும் அதன் இராணுவ சேவையின் கௌரவத்தை பாதுகாக்க தவறியதற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தேசத்துரோக குற்றங்களுக்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தாலும் இரண்டு குற்றவாளிகளுக்கும் அனைத்து நீதித்துறை உரிமைகளும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒப்புக்கொண்டனர் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தைஃப் பிராந்தியத்தின் தலைமையின் கீழ் வியாழக்கிழமை அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு 100 பேரும், 2022ல் 196 பேரும் தூக்கிலிடப்பட்டதாக மனித உரிமைகள் ஆர்வலர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவெனவும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |