ரஷ்ய போருக்கு உதவும் இந்தியா... 24 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை கணிசமாக அதிகரிக்க இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில்
CNBC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இருந்ததில்லை, அவர்கள் எங்களுடன் நிறைய வியாபாரம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வியாபாரம் செய்வதில்லை.
எனவே நாங்கள் 25 சதவீத வரியை முடிவு செய்தோம், ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன், ஏனென்றால் அவர்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறார்கள் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெயை மலிவான விலையில் வாங்கி, அதை வெளிநாடுகளுக்கு விற்று இந்தியா பெரும் ஆதாயம் அடைவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக,
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களைத் தனிமைப்படுத்தியதற்காக அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் இந்தியா விமர்சித்தது.
மேலும், உலக சந்தை சூழ்நிலையால் இந்தியாவின் இறக்குமதிகள் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு தேவையாக இருந்தாலும், அதை விமர்சிக்கும் நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன, அத்தகைய வர்த்தகம் ஒரு முக்கிய கட்டாயமாக இல்லாவிட்டாலும் கூட என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.
ஐரோப்பா-ரஷ்யா வர்த்தகத்தில் எரிசக்தி மட்டுமல்ல, உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களும் அடங்கும்.
ஐரோப்பாவை கண்டுகொள்ளவில்லை
ஆனால், ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவை மிரட்டும் ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவை இதில் கண்டிப்பதில்லை என்பது மட்டுமல்ல கண்டுகொள்ளவும் இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, இந்தியா தனது தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
2024ல் மட்டும் ரஷ்யாவுடன் 78.02 பில்லியன் டொலர் வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ளது. இதில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி 16.5 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியது.
அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத வரி உட்பட வர்த்தக பதட்டங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இதனிடையே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யாவுக்கு திட்டமிட்ட பயணமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |