போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து- கம்போடியா: டிரம்ப் அறிவிப்பு
தாய்லாந்து மற்றும் கம்போடியா போர் நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
தாய்லாந்து கம்போடியா மோதல்
தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியாவும் தாய்லாந்தும் கடந்த ஜூலை 24 ஆம் திகதி எல்லையில் மோதிக்கொள்ள தொடங்கின.
போர் விமானங்கள், பீரங்கிகள், டாங்கிகளை கொண்டு, இரு நாடுகளும் 3 நாளாக தாக்குதலில் ஈடுபட்டு வந்தன.
இரு நாடுகளுக்கிடையேயான மோதலில், இதுவரை 32 பேர் உயிரிழந்ததாகவும், 28 ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தொடர்ச்சியான மோதல்கள் அமெரிக்காவுடனான எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கக்கூடும். இரு தரப்பினரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இரு தரப்பினரும் அமைதியை நாடுகின்றனர்.
அதேநேரத்தில் சர்வதேச அமைப்புகள் நீண்டகால தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. கம்போடிய பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாயுடன் தனித்தனியாகப் பேசினேன்.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன. இது வெற்றிகரமான போர் நிறுத்தமாகக் கருதப்படும், இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நினைவூட்டுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் போரை நிறுத்தியதாக இந்தியா திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், 25 முறைக்கு மேல் இந்தியா பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறி வருகிறார்.