ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு வரி குறைப்பு: பேச்சுவார்த்தைக்கு மதிப்பெண் வழங்கிய டிரம்ப்!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு இறக்குமதி வரிகளை குறைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு
ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை குறைப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது பெண்டானில் என்ற ஆபத்தான போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்க சீனா கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பும் வழியில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பேட்டியளித்த டிரம்ப், அரைக்கடத்தி சிப்(Semiconductor Chips) குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு மதிப்பெண் வழங்கிய டிரம்ப்
இந்நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தைக்கு 0 முதல் 10 வரையிலான மதிப்பெண் கொடுத்தால் ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்கான மதிப்பெண் 12 ஆக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதையும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் சந்திப்பு நடத்த தனக்கு நேரமில்லை என்றும், அவருடன் அணு ஆயுதக் குறைப்பு குறித்து உரையாட தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |